×

கர்நாடகாவில் வீடியோ பதிவு செய்யும்போது ஆர்ப்பரிக்கும் அருவியில் தவறி விழுந்து பலியான வாலிபர்

மங்களூரு: கர்நாடக மாநிலத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து, அனைத்து பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா கொல்லூர் போலீஸ் எல்லைக்குட்ப்பட்ட அரசினகுந்தி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வீழ்ச்சியை காண மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஷிவமொக்கா மாவட்டம் பத்ராவதியை சேர்ந்த சரத்குமார்(23) என்பவர் தனது நண்பருடன் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனத்திற்கு செய்துவிட்டு, அரசினகுந்தி நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

அப்போது, உயரத்தில் இருந்து தண்ணீர் விழும் காட்சியை பாறையில் சரத்குமார் நின்று ரசித்துக் கொண்டிருந்தபடி அவரின் நண்பர் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென கால் வழுக்கி சரத்குமார் ஆர்ப்பரிக்கும் நீரில் விழுந்தார். இதையடுத்து அவரது நண்பர் குருராஜ் உடனடியாக வன ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார். விரைவில் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் வாலிபரை தேடினர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து சடலத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக கொல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அருவியை ரசித்தப்படி வீடியோ எடுத்த போது தவறி விழுந்த வாலிபர் நீரில் மூழ்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post கர்நாடகாவில் வீடியோ பதிவு செய்யும்போது ஆர்ப்பரிக்கும் அருவியில் தவறி விழுந்து பலியான வாலிபர் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Mangaluru ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் கழன்று ஓடிய கன்டெய்னர் லாரியின் முன்பக்க டயர்கள்